உள்நாட்டு செய்தி
‘தாக்குதலை தடுக்காமல் இருக்குமளவுக்கு நான் கொடுராமானவன் அல்லன்’-மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல் முன்கூட்டியே கிடைத்திருந்தால் தாக்குதலுக்கு ஒருபோதும் இடமளித்திருக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெரிந்தும் தாக்குதலை தடுக்காமல் இருக்குமளவுக்கு தான் கொடுராமானவன் அல்லன் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேற்று (26) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.
‘நாட்டுக்கு பாரிய ஆபத்து வருகின்றது என தெரிந்தும் அதனை ஜனாதிபதி தடுக்கவில்லை என கூறுவோரின் மூளையில் பிரச்சினையுள்ளது. எனக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்டது என்பதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் எங்கும் சொல்லப்படவில்லை. நான் ஆணைக்குழுவுக்கு 9 நாட்கள் சென்றேன். அங்கு நான் வழங்கிய சாட்சிகள் சில ஊடகங்களில் வேறு விதமாக வசன மாற்றங்களால் திரிபுப்படுத்தப்பட்டன. 2017 ஆம் ஆண்டிலேயே சஹரானுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரை கைது செய்ய வேண்டியது ஜனாதிபதிக்குரிய கடமையல்ல’ என்றார்’