Connect with us

Entertainment

அழகு….

Published

on

அழகு…. உண்மையில் இதன் பொருள் தான் என்ன நிறமா, உடலா, மணமா எது……
பதிலில்லா கேள்வி அல்ல இது, இந்த சமூகத்தில் கேட்கப்பட்ட பல கேள்விகளில் இதுவும் ஒன்று, விடை அறியப்பட்ட கேள்வியும் கூட, அகத்தின் அழகு….இது தான் உண்மையான அழகாம் சமூகம் கூறும் பதில் இது. அகம் அழகாய் இருப்பவனுக்கு, இச்சமூகம் சூடும் பேர் வேறு, ஏமாளி, பைத்தியக்காரன்…மேலும் மேலும், என்னனேன்னவோ நான் அறியேன். அழகு என்ற சொல் ஒருவரின் அகத்தின் அழகை தான் குறிக்கிறது என்றால், அகத்தை அழகாய் கொண்ட அரிய நபர்கள், அழகன் அல்லது அழகி என தானே அழைக்கப்பட வேண்டும்….. இங்கு அப்படி அழைப்பவர் தான் யார்…….

விதி ஆடும் விளையாட்டில் நிலை இல்லாது ஆடும் நூல் பொம்மைகள் தான் மனிதர்கள். இதோ என் முப்பத்தாறு வயதில் அறிந்து கொண்டேன், இந்த அரிய உண்மையை……..
நான் கலையரசி, காவல் துறையில் உயர் பதிவியில் மிடுக்காய் அமர்ந்து இருக்கிறேன். இதோ என் முன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்…..
அதில் மூன்றாவதாக அந்த நாற்பதை கடந்த மனிதன்…
இவனை நான் முன்பே அறிவேன், என் மைந்தன் இவ்வுலகில் கால் பதிக்க இவன் பங்கு சிறு துளி, உண்மையில் அது கூட இல்லை….
என் பதினாறு வயதில் திருமணம், அது ஓர் அறிவிப்பு அவ்வளவு தான், இது தான் அன்று நான் அறிந்தது…..
அன்று இரவு இதுவரை கண்டிராத அச்சம், படபடப்பு…….
தாம்பத்தியம் மிக அழகான உறவாம்…. யாரென்றே அறியா ஆணின் கைகளில் அவள் விருப்பு அறியாது அவள் பெண்மை சிதையும் நிகழ்வு தாம்பத்தியமா….
காதல்….அது காமம் மற்றும் உரிமையோடு சேரும் இடம் அது தாம்பத்தியம்…. இது என்ன பெண்மையை சிதைக்கும் திருவிழாவா…..

ஓர் இரவில் வாழ்க்கை வெறுத்து விடுமா…. வெறுத்து தான் போனது, அந்த ஓர் இரவில் மொத்த வாழ்க்கையும் வெறுத்து போனது…. அழகிய உறவு, தினம் நினைத்து நாணம் கொள்ள வேண்டுமா…. அது சாத்தானின் கை சாட்டையாய் அல்லவோ தெரிந்தது…..இது விதியின் சதியா…. இல்லை மனித உரு கொண்ட கொடூர மிருகங்களின் செயலா……. வாழ்க்கை அத்துடன் அதன் கோர தாண்டவத்தை முடித்திடவில்லை… இதை விட பெரும் வெறுமை காத்திருக்கிறது என தெரியாது போனேன்….. ஓர் மாதம், ஆண் எனும் பெரும் சொல் போர்த்திய அந்த அரக்கனின் பிடியில் தினம் தினம் பெண்மை எனும் மென்மை சிதைந்து போனது…. பெண்ணவள் கொண்ட மென் மனம் இறந்து போனது……

ஓர் திங்கள் முடிவில், சில பல விலை தாள்கள் உடன்…. கருப்பியே உன் சேவைக்கு நன்றி எனும் பெரும் நன்றி நவிலும் படலத்துடன் அரக்கனின் பிடியில் இருந்து விடுதலை…. ஆம்! விடுதலை தான், நான் கலங்கவில்லை…. அந்த அரக்கன் சென்ற நொடி மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது. மறு மாதம் பெண்ணாய் பிறந்ததன் அர்த்தம் அதை உணர வைத்த என் மைந்தனின் இவ்வுலக வருகைக்கான அறிவிப்பு…..

அவன் இவ்வுலகை காண, உயிரின் கொடூர வலி தனை உணர்ந்த நொடிகள்…. என் குழந்தை அவன் பாலினம் ஆணாம்….. அந்நொடி என்னுள் பெரும் உறுதி, சமூகம் போற்றும் ஆணாய் என் மகன் இருப்பான் என்று……

அதன் பின்னான கடும் உழைப்புக்கள்….. தோள் தாங்க என் தாய்…எனும் தேவதை…. கல்வி எனும் செல்வம் கொண்டு வாழ்வில் உயர்ச்சிகள்….. இன்று இதோ காவல் துறையில் முக்கிய உயர் பதவியில் கர்வமாய் நான்….. என் புற தோற்றம் கண்டு விமர்சிக்க யாருக்கும் இங்கு துணிவில்லை….. துணிவை யாருக்கும் நான் தரவில்லை…..

அந்த மனிதனை கண்டு நினைவு எனும் கால சுழலில் மூழ்கி மீண்டு வர, அனைவரும் என் முன்….. இப்போது அம்மனிதன் மீது கோபம் உண்டா என்றால் கண்டிப்பாக தெரியாது….. ஏன்…. இக்கேள்விக்கு பதில் உரிமை இருந்தால் தானே கோபம் எனும் உணர்வும்…. உரிமையே இல்லை என்றால், உரிமை கொள்ளும் எண்ணமும் இல்லை என்றால்…… கோபம் எனும் உணர்வு தான் எது……

அம்மனிதன் அருகில் சென்றேன்…. நன்றி, அன்று அவர் கூறிய அதே வார்த்தைகள்…. இந்த நன்றி என்னை விட்டு சென்றதற்காக, நிறம் எனும் காரணம் கூறி என்னை தூக்கி எரிந்ததற்காக…… அவருக்கு என்னை தெரியவில்லை, எப்படி தெரியும் அச்ச பறவையாய் ஒடுங்கி இருந்தவள்…. முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நிற்கும் அதிகார பெண்ணாய் இருந்தால் எப்படி தெரியும்…….

இதோ மருத்துவமனை நோக்கி என் பயணம்…. என் மைந்தனை காண…. இரு நாட்கள் முன் உயிரின் வலிகளில் மருத்துவமனை சேர்ந்தான்….
அரக்கன் பிடியில் சிக்கி இளம் பெண்ணவளின் பெண்மை சிதையும் முன், என் இருபது வயது அகவை கொண்ட இளம் காளை என் மகன் அப்பெண்ணை காத்தான்….. அவனை விட வயதிலும் பலத்திலும் இரு மடங்காக பலம் கொண்ட தீயவன் கைகளில் இருந்து காக்கும் போராட்டத்தில் அவன் உடலும் வெகுவாய் அடிபட்டு போனது…..

நான் வந்து சேரும் போதும் அவன் போராட்டம் அது முடியவில்லை, அவன் நிலை கண்டு நான் கண்ணீர் சிந்தவில்லை….. இது தாய்யாய் நான் கர்வம் கொள்ளும் தருணம்….இதில் கண்ணீருக்கு என்ன வேலை…..

அவனும் ஆண்….. பெண்மையை போற்ற தெரிந்த ஆண்….. அகத்தின் அழகு தனை ஆராதிக்க தெரிந்த ஆண்….. என் மகன் என் வளர்ப்பு…..என் கர்வம்…… ஆண் எனும் பெரும் சொல்லின் உண்மை அர்த்தம் தனை அறிந்த ஆண்…… பெண்ணின் இலக்கணம் சொல்லும் ஆண்……..

_கதையாசிரியர் – சக்தி_

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *