உள்நாட்டு செய்தி
தாமரை பூ பறிக்க சென்ற ஆசிரியருக்கு நேர்த்த கதி
வவுனியா கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக சென்ற ஆசிரியர் வைரவபுளியங்குளம் குளத்தில் முழ்கி மரணமடைந்துள்ளார்.
இன்று (27.03.2021) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும் தாமரை இலை என்பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்திற்குள் சென்றுள்ளார்.
குறித்த குளத்தில் தாமரை இலை மற்றும் தாமரை பூவைப் பறித்துக் கொண்டிருந்த போது தாமரைக் கொடியில் சிக்கி நீரில் முழ்கியுள்ளார். குறித்த ஆசியர் குளத்திற்கு சென்ற நிலையில் குளத்தில் நடமாட்டதைக் காணாமையால்,
அயலவர்கள் மற்றும் குறித்த குளத்தின் கமக்கார அமைப்பினர் இணைந்து குளத்தில் தேடிய போது நீரில் முழ்கிய நிலையில் ஆசிரியர் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட ஆசிரியர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னேரே நீரில் முழ்கியதால் மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இரசாயனவியல் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரான எஸ்.பரந்தாமன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இதேவேளை, குறித்த ஆசிரியர் இன்று ஆரம்பிக்கும் கல்விப் பொது சாதரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்கும் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.