உள்நாட்டு செய்தி
“இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்ய வேண்டும்” – C.V
இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனையம் தொடர்பான விடயத்தில் அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து தௌிவுபடுத்தும் வகையில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றினை தமிழ் மக்களே தெரிவு செய்யும் வகையில், சர்வதேச சமூகத்தினால் வடக்கு, கிழக்கில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியா தலைமை ஏற்று செய்வதற்கு முன்வர வேண்டும் எனவும் சி.வி விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு முனையம் விடயத்தில் அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றி வந்ததன் தொடர்ச்சியாகவே இம்முறையும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் இது நடைபெறும் என தாம் எதிர்ப்பார்த்தாலும் முன்கூட்டியே அது நிகழ்ந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை இலங்கை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்க வழங்க இருப்பதாக வௌியாகியுள்ள செய்தி மிகவும் பாரதூரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு முனையம் விடயத்தில் நடந்ததே எதிர்காலத்தில் 13 ஆவது அரசியல் திருத்த விடயத்திலும் நடக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒற்றை ஆட்சியின் கீழான எந்தத் தீர்விற்கும் இந்த நிலைமையே ஏற்படும் என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.