Connect with us

Helth

“சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டும்”

Published

on

கொவிட் நோயினை இல்லாது செய்வதற்கு சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகுமென  வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது உலகில் கொவிட் வைரஸ் பரம்பலில், மூன்று வகையான விகாரமடைந்த கொவிட் வைரஸ்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

வேகம் குறைவாகக் காணப்பட்டாலும் புதிதாக மாற்றமடையும் அவ்வாறு உருமாறிய கொவிட் கிருமியினால் ஏற்படும் பாதிப்புக்கள் தற்போது மீளவும் உலகை அச்சுறுத்தி உள்ளன.

பிரித்தானியாவில் உருமாறிய புதிய கொவிட் பரம்பலானது இன்று உலகில் 55 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய விகாரத்தினால் உருமாறும் கொவிட் கிருமிகளினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்த மீளவும் ஆரம்பத்தில் இருந்து முயற்சி எடுக்கவேண்டிய அவலநிலை ஏற்படும்.

கொவிட் கிருமிகள் விகாரமடைய பல காரணிகள் துணைபோகலாம். குறிப்பாக வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளிகளுக்கு ஓ கதிர் மூலம் பரிசோதனைகள் செய்யும்போது  கிருமிகள் விகாரமடையலாம்.

சமூகத்தில் குறித்த சிலருக்கு கொவிட் தடுப்பு மருந்து கொடுக்கும்போது ஏனையவர்களில் விகாரமுற்ற கொவிட் கிருமிகள் உருவாகலாம். இவை யாவும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு உலகளாவிய ரீதியில் சவால்களாக அமையும்.

இந்நிலையில் பயணக்கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி பேணல், தனிமைப்படுத்தப்படல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சுகநல எச்சரிக்கைக் காப்புக்களை கட்டாயம் கடைப்பிடித்தல் அவசியம்.

ஏனெனில் சீனாவில் இருந்து பரவிய வைரஸ் போல் இன்று உலகின் எந்த மூலையில் இருந்தும் புதிது புதிதாக கொவிட் வைரஸ் விகாரமடைந்து பரவலாம்.

அதற்கு உரிய தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு முன்பே மீண்டும் பாரிய அழிவினை ஏற்படுத்தலாம். எனவே சுகாதாரப் பழக்கங்களே கொவிட்டினை உலகில் இருந்து முற்றாக அகற்ற உதவும். அதற்காக இன்னும் இரண்டு வருடங்கள் சுகநல வழிகளில் கவனமாக இருத்தல் வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.