உள்நாட்டு செய்தி
ஹிசாலினியின் மரணம்: ரிசாட்டின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
பொரளை பொலிஸார் உட்பட குற்றப்புலனாய்வு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பணியகம் ஆகியவற்றின் விசேட குழுக்கள் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாhட் பதியூதீன் வீட்டுப்பணிப்பெண்ணாக கடமைபுரிந்த 16 வயது டயகம பகுதியை சேர்ந்த சிறுமி அண்மையில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட மூவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக 72 மணித்தியால தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்துவதற்கான அனுமதி கோரப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீடடில் பணிப் பெண்னாக கடமையாற்றிய ஹிசாலினி என்ற சிறுமி கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.