உள்நாட்டு செய்தி
மலையக தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு
அரசாங்கம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் நோக்கில் இன்று (14) முதல் மலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மலையக தோட்டங்களின் அனைத்து நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும், தோட்டப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் தடை அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், பெருந்தோட்ட நகரங்களும், புறநகர்ப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன, சுகாதாரம், மின்சாரம், நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைக் கொண்ட வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களும் வீதிகளில் செல்வதை காணக்கூடியதாக இல்லை.
மலையக தோட்டங்களில் வசிக்கும் மக்களை தேவையற்ற முறையில் நகரங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும், வீதிகளிலும் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தலவாக்கலை நகரம் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தலவாக்கலை நகரம் முழுவதும் தொற்று நீக்கி செய்யப்பட்து.
இதன்படி பஸ் தரிப்பிடம், புகையிரத நிலையம், பொதுசந்தை கட்டடத்தொகுதி, மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வீதிகளிலுள்ள பாதுகாப்பு வேலி உட்பட பல இடங்களில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், இரசாயண திரவம் தெளிக்கப்பட்டு வீதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன.