உள்நாட்டு செய்தி
கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கறுப்பு ஞாயிறு
நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகின்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் கத்தோலிக்க தேவாலயங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இன்றைய தினம் கறுப்பு ஞாயிறு தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு விசுவாசிகள் அனைவரும் கறுப்பு நிற ஆடையுடன் திருப்பலிகளில் கலந்துகொண்டனர்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தாக்குதலின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ளவே இந்த ஆணைக்குழுவின் மூலம் நாம் எதிர்பார்த்தோம். எனினும் அது தொடர்பில் ஆணைக்குழு எந்தளவிற்கு செயற்பட்டுள்ளது என்பது எமக்குத் தெரியாது. ஆகவே ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என்பதால் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சேகரித்து தாக்குதலை உண்மையாக வழிநடத்தியவர்கள் யார் என்பதை வௌிக்கொணரவே நாம் முயற்சிக்கின்றோம். ஏனெனில் மக்கள் இதனையே எதிர்பார்க்கின்றனர்
என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதன்போது தெரிவித்தார்.