Helth
ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விடயங்களை இன மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இது குறித்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சுகாதார தரப்பின் பிரதானிகள் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களில், கொரோனா வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை, சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய, நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விடயங்களை இன மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும்
ஒத்துழைப்பு அவசியம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.