Connect with us

உள்நாட்டு செய்தி

கடன் பெறும் எல்லையை 2,997 பில்லியனில் இருந்து மேலும் 400 பில்லியனால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Published

on

அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 2,997 பில்லியனில் இருந்து மேலும் 400 பில்லியனால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, கடன் பெறும் எல்லையை 3, 937 பில்லியனாக அதிகரித்து ஒதுக்கீட்டு சட்டத்தை திருத்துவதற்கு நிதியமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

COVID-19 பெருந்தொற்று மேலெழுந்துள்ள நிலைமையில், அரச வருமானம் இழக்கப்பட்டமையினால் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்கான மேலதிக நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டி ஏற்பட்டதாலும் இதர துறைகளில் செலவுகள் அதிகரித்தமையினாலும் 2021 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லையை அதிகரிக்க நேரிட்டுள்ளது.

இதனிடையே, COVID-19 அவசர சிகிச்சைகள் மற்றும் சுகாதார கட்டமைப்பை தயார்படுத்தும் திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கொவிட் – 19 இற்கான தேசிய பிரயோகங்கள் மற்றும் தடுப்பூசி திட்டமிடல் போன்றவற்றை இயன்றளவு இலங்கையின் சனத்தொகையில் 60% வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் அடிப்படை இலக்கை விரிவாக்குவதற்கு கொவிட் முகாமைத்துவத்திற்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது.

அதற்காக கொவிட் – 19 மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் கொவிட் 19 அவசர பதிலளிப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறையை தயார்படுத்தல் கருத்திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.