உள்நாட்டு செய்தி
கிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்களை தாக்க முற்பட்ட காட்டு யானை
கிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்களை தாக்க முற்பட்ட காட்டு யானையிடமிருந்து தெய்வாதீனமாக மீனவர்கள் தப்பித்துக்கொண்டனர்.
நேற்று இரவு 11 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
வழமைபோன்று நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக மீனவர்கள் இரணைமடு குளத்திற்கு மாலை சென்றுள்ளனர். அங்கு முதலை வலைகனை சேதப்படுத்தாமலும், வலைகளை பாதுகாக்கும் வகையிலும் மீனவர்கள் காவலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது வலைகளை விரித்துவிட்டு அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி வள்ளத்திலேயே இருவர் உறங்கிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் காட்டுப்பகுதி ஊடாக குளத்திற்குள் புகுந்த தனி யானை ஒன்று உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்கியுள்ளது.
அச்சத்தில் குளத்தினுள் பாய்ந்த மீனவர்கள் ஏனைய தொழிலாளர்களின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதி 15 அடி ஆழம் கொண்ட குறித்த பகுதிக்கு யானை நீந்தி சென்று இவ்வாறு தாக்க முற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் தாக்க முற்பட்ட யானை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாகவும், அதிலிருந்து பலமுறை மீனவர்கள் தப்பிக்கொண்டதாகவும் அவர்க் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் மீனவர்கள் தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டதாகவும், அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி வள்ளம் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
குறித்த யானையின் அச்சுறுத்தலிலிருந்து தமக்கு பாதுகாப்பினை பெற்றுத்தருமாறு இரணைமடு நன்னீர் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.