Connect with us

உலகம்

“உக்ரைன் தன்னை தற்காத்துக் கொண்டு வெற்றி பெறும்”

Published

on

உக்ரைன் மீது நடந்த பல மணிநேர தாக்குதலில் விமான தளங்கள் மற்றும் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு விட்டன என ரஷியா தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். 

உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். 

தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய படைகள் உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்து வருகின்றன.

உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

ரஷியா – உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன.

ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளது.

உக்ரைனில் கீவ் விமான நிலையத்தில் ரஷியா போர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பதிலடி தாக்குதலாக லுஹன்ஸ்க் பகுதியில் ரஷியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், ரஷிய ஹெலிகாப்டர் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அதேநேரத்தில் உக்ரைன் தரப்பில் நூற்றுக்கணக்கில் ராணுவ வீரர்கள் ரஷிய படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷ்யா, சைபர் தாக்குதலையும் தொடங்கியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

உக்ரைன் அரசின் முக்கிய இணையதங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் அரசின் வெளியுறவுத்துறை, உட்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் சைபர் தாக்குதலில், உக்ரைன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான போரை துவக்கி உள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமைட்ரோ குலேபா கூறியதாவது, “உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான போரை துவக்கி உள்ளது. அமைதியாக இருந்த உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

உலக நாடுகள் இதில் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். உலகம் உடனடியாக செயல்பட வேண்டும்.
பேரழிவு ஏற்படுத்தும் நடவடிக்கையை ரஷியா துவக்கி உள்ளது.

உக்ரைன் தன்னை தற்காத்துக் கொண்டு வெற்றி பெறும். தற்போது ரஷியா, அனைத்து வகையிலும் தனித்து விடப்பட்டுள்ளது. உலகம் மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

இதேவேளை, போரை முன்னிட்டு லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பு பகுதிக்கு புலம்பெயர உக்ரைன் அறிவுறுத்தி உள்ளது. 

இதன்படி, லிசிசான்ஸ்க், ரூபிஜ்னே மற்றும் ஸ்வாடோவ் ரயில் நிலையங்களுக்கு செல்லும்படி கூறப்பட்டுள்ளது. 

மெட்ரோ சுரங்க பாதையில் உக்ரைன் மக்கள் தற்காத்து கொள்வதற்காக தஞ்சமடைந்துள்ளனர்.

உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்து குண்டு உள்ளிட்ட வகை வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன.

உக்ரைனில் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ரஷியா குண்டு வீசுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ், கிழக்கு துறைமுக நகரான மரியூபோல்,கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா மீது போர் விமானங்கள் மூலம்  ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

இவ்வாறான சூழலில் மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

.