உள்நாட்டு செய்தி
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு மன்னாரில் பெருமளவான மக்கள் அஞ்சலி
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஓய்வு நிலை ஆயரின் பூதவுடநேற்று (2) யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.
ஓய்வு நிலை ஆயரின் பூதவுடலுக்கு நேற்று (02) மாலை முதல் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்றைய தினம் (03) ஆயிரக்கணக்கான மக்கள் இன, மதம் இன்றி ஆயருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை (04) மாலை 3 மணியளவில் ஆயிரின் பூதவுடல் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
அங்கு மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள்.
அதனைத் தொடர்ந்து பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
அதாவது ஆயரின் இறுதி கிரியைகள் இடம்பெறும் திங்கட் கிழமை தமிழ், முஸ்ஸீம் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களை மூடி துயரத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.