முக்கிய செய்தி
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 200 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் நேற்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நாட்டு மக்கள் எதிர்நோக்கிய கடுமையான பொருளாதாரச் சிரமங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது.சமுர்த்தி உதவி, சமுர்த்தி கடன், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு, 100 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு, அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் அஸ்வெசும கொடுப்பனவு என 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 184,098.27 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் நிவாரண உதவித்தொகை தேவைப்படும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் நிலுவைகள் உட்பட 2023 ஆம் ஆண்டில் சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை சுமார் 189,650.95 மில்லியன் ரூபா (189.6 பில்லியன்) ஆகும்.முதல் கட்டமாக நிவாரணம் பெறாதவர்களுக்கு 2024 பெப்ரவரியில் 1813 மில்லியன் ரூபா நிவாரணம் வழங்கப்பட்டது. இது தவிர அஸ்வெசும மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்த பின்னர் மேலும் 13,697.35 மில்லியன் ரூபா நிதி வறுமையில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.சமுர்த்தி கடனாக வழங்கப்பட்ட தொகையுடன், 2023 ஆம் ஆண்டில் சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை ரூ. 199,608.62 மில்லியன் அதாவது சுமார் 200 பில்லியன் ரூபா.2022 ஜூலை மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், டிசம்பர் 2023 வரை (17 மாதங்களுக்குள்) சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 129.93 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது, இதில் சமுர்த்தி கொடுப்பனவாக 65.91 பில்லியன் ரூபா ஏழைகளுக்கு வறுமையில் உள்ள மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.சமூகப் பாதுகாப்புக் கொடுப்பனவுகளுக்கு (பிறப்பு, திருமணம், இறப்பு, நோய்கள், புலமைப்பரிசில்கள், இரட்டைப் பிறப்புகள்) வழங்கப்படும் தொகை 4.52 பில்லியன் ரூபாவாகும். இது தவிர சமுர்த்தி வங்கி இதே காலப்பகுதியில் 59.5 பில்லியன் ரூபாவை கடனாக வழங்கியுள்ளது.மேலும், இந்த ஆண்டு பாடசாலைக் குழந்தைகளுக்கு போசாக்கு உள்ள உணவுத் திட்டம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவித் திட்டம், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஆகியவற்றை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட “லிய சவிய” கடன் திட்டத்தின் கீழ் 12% வட்டிக் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டன.ஜனசவிய, சமுர்த்தி போன்ற முன்னைய வேலைத்திட்டங்களில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள் மற்றும் அதிகாரத்துவத்துக்கு மாறாகவே அரசாங்கம் இந்த சமூகப் பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்துகிறது.அதன்படி, நாட்டில் 30 இற்கும் மேற்பட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நிவாரணத் திட்டத்திற்காக உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. அதனை 05 வருட அவகாசத்துடன் 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். 2024 மார்ச் 31, க்குள் நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கை 1,854,308 ஆக இருக்கும் என்பதையும் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.