Connect with us

முக்கிய செய்தி

பேரணி மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

Published

on

 

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது முறையில் மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக நடவடிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொழும்பில் நேற்று எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

முன்னதாக கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேரணியை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் என்பன தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியினர் தங்களது எதிர்ப்பு பேரணியை நீதிமன்ற தடை உத்தரவுக்கு உட்படாத வேறு இடங்களிலிருந்து ஆரம்பித்திருந்தனர். இதன்படி, வெவ்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகள் கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.

இதனால் குறித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் பொலிஸாரின் தடைகளை மீறி ஆர்ப்பாட்ட பேரணி முன்னோக்கி செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸார் இரு வேறு சந்தர்ப்பங்களில் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொதுமக்களின் அடிப்படை உரிமையும், மனித உரிமையும் முழுமையாக மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் முடியுமாயின் மக்களை சந்திப்பதற்கு முன்வர வேண்டும் என தாம் சவால் விடுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாக்குகளின் ஊடாகவே தங்களது பதிலளிப்பு காணப்படும். எதிர்காலத்தில் தங்களது அரசாங்கத்தின் போது நாட்டை நெருக்கடி நிலைக்கு கொண்டு சென்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.