முக்கிய செய்தி
72 சுகாதார நிபுணர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில், வைத்தியசாலைகளில் முப்படையினர் குவிப்பு
72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து இன்று காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி, அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
மருத்துவ ஆய்வுக்கூட நிபுணர்கள், கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள், மருந்தாளர்கள், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பினால், புற்றுநோய், சிறுநீரகம், மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய நோயாளர் பராமரிப்பு சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பானது முற்பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் எவ்வித இணக்கப்பாடுகளும் ஏற்படாவிட்டால், தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினர் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.