Connect with us

முக்கிய செய்தி

மக்களை உதவியற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ள அரசாங்கத்தின் வரிக்கொள்கை

Published

on

வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என நாட்டில் நாலா பகுதிகளிலும் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் நாட்டில் நிலவும் வங்குரோத்து நிலை காரணமாக மிகவும் உதவியற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தன்னிறைவு வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த எமது நாடு, தற்போதுள்ள அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தன்னிச்சையான ஆட்சியினாலயே இவ்வாறு கடுமையான வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கை
இந்த வங்குரோத்து நிலையால் நிர்க்கதிகளை சந்தித்து வரும் இந்நாட்டு மக்களை மேலும் சிரமங்களுக்குள் தள்ளுவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கையே காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(15) நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்,

தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இவ்வேளையில்,விவசாயப் பொருட்களுக்கு கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரிசி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், ஒரு நாடாக நாம் தொடர்ந்து இவ்வாறே பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

இந்த நன் நோக்கத்திற்காக எழுந்து நிற்க தைரியம் கிட்டப் பிரார்த்திக்கின்றோம். நாம் அனைவரும் அனைத்து மதங்களையும், இனங்களையும்,சாதிகளையும் சமமாக மதிக்க வேண்டும். அதுவே நமது நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு காரணமாக அமையும்.

எந்தவொரு பாகுபாடுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் அவருக்குரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.