முக்கிய செய்தி
100,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக 100,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்து அரச தலையீட்டின் கீழ் மட்டுமே விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த போகத்தில் சுமார் ஏழு வீதமான நெற்செய்கை நிலங்களில் கீரி சம்பா பயிரிடப்பட்டு 5,000 மெட்ரிக் தொன் அறுவடை கிடைத்ததாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.
சில நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசி இருப்பு வைத்துள்ளதாகவும், அரிசி கையிருப்பின் மூலம் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டுக்கு 475,000 மெட்ரிக் தொன் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தேவைப்படுவதாகவும், 500,000 மெட்ரிக் தொன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் அதிக அளவு அரிசி உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உரத்துக்கான பணம் விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்கப்படும் என்றும், உரங்களின் தரத்தில் எந்தக் குறைவும் ஏற்படாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.