முக்கிய செய்தி
பஸ் மற்றும் முச்சக்கர வண்டி கட்டணத்திருத்தம் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்!

டீசல் விலை 27 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பஸ் பயண கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.
முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும், பேருந்து பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கவில்லை, பஸ் பயண கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வதானால் 4 சதவீத எரிபொருள் விலை திருத்தம் கவனத்திற்கொள்ளப்படும்.
இருப்பினும், தற்போதைய விலை குறைப்பானது 1.5 சதவீதமாகவே அமைந்துள்ளதால், பஸ் பயண கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டார்.
இதேவேளை, பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கரவண்டியின் பயண கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கமும் அறிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வேன்களின் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.