Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைத் தமிழர்கள் சம உரிமை மற்றும் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு உறுதிப்படுத்தி வருகிறது – இந்திய பிரதமர்

Published

on

இலங்கைத் தமிழர்கள் சம உரிமை மற்றும் அவர்கள் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்தும் விரும்புவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அரச நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மோடி இதனை கூறியுள்ளார்.

“தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம். முன்னர் இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இலங்கை சிறைகளில் இப்போது ஒரு இந்திய மீனவர்கூட இல்லை. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இதுவரை 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியாவின் கடலோர பகுதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
இலங்கை தமிழர்களின் நலனை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.

இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனையை இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இலங்கைத் தமிழர்கள் சம உரிமை மற்றும் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதல் இந்திய அரசத் தலைவர் நானாவேன். மலையக மக்களுக்கும் வீட்டுத் திட்டங்களை வழங்கியுள்ளோம். யாழ்ப்பாணத்தில் இந்தியாவினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் விரைவில் திறக்கப்படும். யாழ். – மன்னார் ரயில் பாதை புனரமைக்கப்பட்டு வருகின்றது. சென்னைக்கும் , யாழ்ப்பாணத்திற்கும் இடையில் விமான சேவை இடம்பெறுகின்றது” என்றார்.