முக்கிய செய்தி
யாழில் தமிழ் இளைஞன் தடுப்புக் காவலில் உயிரிழப்பு, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இளைஞரை கொடூரமாக சித்திரவதை செய்ததாக நம்பப்படும் வட்டுக்கோட்டை பொலிஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, காவலில் வைத்து உயிரிழந்த தமிழ் இளைஞரின் உறவினர்கள் உள்ளிட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை, சித்தங்கேணியைச் சேர்ந்த 26 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்பவரின் சடலம் நவம்பர் 21ஆம் திகதி, இளவாலை வெல்லாவெளி மயானத்திற்கு இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது, இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கோரி பிரதேசவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட பதாகைகள் மாத்திரமின்றி, “வட்டுக்கோட்டை பொலிஸாரின் அராஜகம் ஒழிக, அலெக்ஸுக்கு நீதி வேண்டும்” என சிங்கள மொழியிலும் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாகராசா அலெக்ஸ், நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கீழ் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தடயவியல் நிபுணர் ருத்ரபசுபதி மயோரதன் தெரிவத்தமைக்கு அமைய, இறந்த இளைஞனின் முதுகு, கை மற்றும் கால்களில் பல காயங்கள் காணப்பட்டுள்ளன.
வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் நவம்பர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விசாரணைக்காக எனக் கூறி தனது மகனை பொலிஸார் கைது செய்ததாக நாகராசா அலெக்ஸின் தாயார் நவம்பர் 10ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, நாகராசா அலெக்ஸை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாகராசா அலெக்ஸை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாகராசா அலெக்ஸ் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, வைத்தியசாலையில் அவரை பார்வையிட வந்த உறவினர்களிடம் தன்னை பொலிசார் சித்திரவதை செய்ததை நாகராசா அலெக்ஸ் விபரித்ததை உறவினர் ஒருவர் கைத்தொலைபேசி காணொளி பதிவு செய்துள்ளார்.
“பொலிஸ் சந்தேக வழக்கில் கொண்டுச் சென்று அடித்தனர். களவு போயுள்ளதாக சொல்லி அடித்தார்கள். பின் பக்கத்தால் கட்டிப்போட்டுட்டு, முகத்தை துணியால் கட்டிப்போட்டு தண்ணியை ஊற்றி ஊற்றி அடித்தார்கள். கொஞ்சமாகத்தான் சாப்பிட தந்தார்கள். அடித்துவிட்டு விட்டார்கள். ஒரு கயிற்றினால் கட்டி அடித்தார்கள். கேட்டு கேட்டு அடித்தார்கள் நான் இல்லை என்றேன். பையில் பெற்றோலைத் தடவி அடித்தார்கள். நான் மயங்கிப் போனேன். இரண்டு கைகளையும் தூக்க இயலாது. முதலில் சாப்பாடு தரவில்லை. அடுத்தநாள் தான் சாப்பாடு தந்து அவர்களின் அறையில் கொண்டு சென்று, எதுவும் சொல்ல வேண்டாம் எனக் கூறினார்கள். அடுத்தநாள் என்னை அச்சுறுத்தினார்கள். சாராயம் குடிக்கத் தந்தார்கள். ஒரு பெக்,” என நாகராசா அலெக்ஸ் காணொளியில் கூறியுள்ளார்.
இளைஞனின் மரணம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சரவணபவன் விடுத்துள்ள அறிக்கையில், நாகராசா அலெக்ஸ் பொலிஸ் காவலில் இருந்த போது சித்திரவதை செய்யப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ளார்.
“இந்த சம்பவத்தில் தெட்டத்தெளிவாக அவர் உயிரிழப்பதற்கு முதல் வழங்கிய வாக்குமூலம் சரி உறவினர்களின் வாக்குமூலம் சரி அனைத்துமே அவர் பொலிஸாரது தடுப்பு காவலில் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதில் சந்தேகதிற்கிடமின்றி காணப்படுகின்றது.”
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும் தற்பொழுது மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கயை சந்தித்த யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாநகரின் முன்னாள் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் அறிக்கையொன்றை வெளியிட்டு, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“உயிரிழந்த இளைஞனின் மரண வாக்குமூலம் சித்திரவதைகள் அம்பலமாகும் நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவதுடன் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பது வெறும் கண்துடைப்பாகும். உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும்.”