Connect with us

முக்கிய செய்தி

சமையல் எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு

Published

on

நாட்டின் எரிபொருள் விலையானது நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் ஆகியன தமது புதிய எரிபொருள் விலையினை வெளியிட்டுள்ளன.

அந்த வகையில்,

⭕92 Octane பெட்ரோல்: Rs. 348/- (Rs. 20 அதிகரிப்பு)

⭕95 Octane பெட்ரோல்: Rs. 375/- (Rs. 10 அதிகரிப்பு)

⭕ஒட்டோ டீசல்: Rs. 308/- (Rs. 2 குறைப்பு)

⭕சுப்பர் டீசல் : Rs. 358/- (Rs. 12 அதிகரிப்பு)

ஆக எரிபொருள் விலை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி என்பன எரிபொருள் விலை ஏற்றத்தில் பிரதான தாக்கத்தை செலுத்தியுள்ளன.

இலங்கை ரூபாயானது, ஆண்டின் முதல் பாதியில் சிறந்ததாக இருந்து தற்சமயம் ஆசியாவின் மிக மோசமாக செயல்படும் நாணயமாக மாறியுள்ளதாக புளூம்பேர்க் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த முன்று வாரங்களாக ரூபாவின் பெறுமதியானது தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வந்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.

இலங்கை மத்திய வங்கியின் நேற்றைய நாணய மாற்று விபரத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி 322.96 ரூபாவாகவும், 335.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் ஏற்படும் நிலைமைகளுக்கு மத்தியில் ரூபாயின் பெறுமதி சரிவினை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக புளூம்பேர்க் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை, இந்த ஆண்டின் இறுதிக்குள் ரூபாயின் மதிப்பு மேலும் 8% குறைந்து ஒரு டொலருக்கு 355 ஆக இருக்கும் என்று ஹாங்கொங்கில் உள்ள Natixis SA இன் பொருளாதார நிபுணர் Haoxin Mu கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ரூபாவின் அண்மைய வீழ்ச்சியானது டொலரின் தேவை மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் உண்டான தற்காலிக நிலைமை என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கையில் முதலீடு செய்த வைப்பாளர்களுக்கு வழங்குவதற்கு வங்கிகள் போதுமான டொலர்களை சேகரிக்க வேண்டியதன் அவசியத்தால் நிலைமை பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக வங்கிகள் சந்தையில் டொலர்களை வெளியிடுவதை தற்காலிகமாக கட்டுப்படுத்தலாம்.

இது ஒரு தற்காலிக நிலையே அன்றி, நீண்ட காலப் போக்கு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பில் பெரும் தாக்கத்தினை செலுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் திங்களன்று (ஜூலை 31) மசகு எண்ணெய் விலையானது கடந்த மூன்று மாதங்களில் உச்ச நிலையினை எட்டியது.

அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் 03.15 GMT மணிக்குள் ஒரு பீப்பாய்க்கு 45 சென்ட் அதிகரித்து 84.54 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

அதேநேரத்தில், யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 33 சென்ட்கள் அதிகரித்து 80.25 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

சவுதி அரேபியா ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்கள் என்ற எண்ணெய் உற்பத்தி குறைப்பை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது செப்டெம்பர் மாதத்திற்கு நீட்டிக்கும் என்று கூறப்படும் வேளையில் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

2023 ஜூன் நடுப்பகுதியில் இருந்து எண்ணெய் விலைகள் 18% உயர்ந்துள்ளன, ஏனெனில் அதிக தேவை மற்றும் சவுதி விநியோக குறைப்புகளினால் பற்றாக்குறை ஆகியவை அதில் பிரதான பங்கு வகிக்கின்றன.

எனவே இவ்வாறான காரணம் உள்நாட்டில் எரிபொருள் அதிகரிப்புக்கு பிரதான காரணமாக பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க இந்த வாரம் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைய நாட்களில் ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி கணிசமாக அதிகரித்தமையே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இது தொடர்பாக லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட்ட அதிகாரி ஒருவரை அய்வரி செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டப்போது,

அதற்கான சாத்தியம் இருக்கின்ற போதும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அதேநேரம் விலை அதிகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இம்முறை விலைச்சூத்திரத்தை அமுலாக்காமல் இருப்பது குறித்து ஆராய்வதாகவும் அவர் அய்வரிக்கு கூறினார்.