முக்கிய செய்தி
செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு
செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக இந்த பொருளாதார நெருக்கடி உருவாகும். வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவது ஆரம்பிக்கப்படும்.
வெளிநாட்டு கடன் திரும்ப செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மீதமாகியுள்ள அந்நிய செலாவணியை பயன்படுத்தியே அரசாங்கம் அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகிறது.
நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமையானது தற்காலிகமானது, செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்.
அதேவேளை நான் ஜனாதிபதியாக பதவிக்கு வருவது குறித்து சிலர் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். நான் ஜனாதிபதியாக பதவி வருவதற்கு தகுதியில்லை என்பதற்கான காரணங்களை எவரும் இதுவரை முன்வைக்கவில்லை.
ஊழல் அரச அதிகாரிகள், மோசடியான வியாபாரிகள், மோசடியான குடும்ப ஆட்சியாளர்கள் நான் ஜனாதிபதியாக பதவி வருவதை விரும்பவில்லை என்பதுடன் நான் அந்த பதவிக்கு வந்தால் தமக்கு என்ன நடக்குமோ என்று அச்சப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.