முக்கிய செய்தி
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட சிறுவர்களுக்கு இலவசம்!
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் எண்பத்தேழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, 12 வயதுக்குட்பட்ட சகல சிறார்களுக்கும் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும் என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சலுகையானது ஜூலை 3 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நாளில் விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பது தொடர்பான மனப்பாங்கு அறிவை மக்களிடையே வளர்க்கும் நிகழ்ச்சிகளும், குழந்தைகள் அறிவைப் பெறும் பல வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடு தெரிவித்துள்ளார்.