முக்கிய செய்தி
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்-மத்தி பகுதியில் பெண்போரளிகளது எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதையடுத்து, குறித்த இடத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சென்று பார்வையிட்டுள்ளார்.
இன்றைய தினம் 30 ஆம் திகதி அங்கு சென்ற கஜேந்திரன் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் கூறியுள்ளதாவது, 1984ஆம் ஆண்டு கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மக்கள் இராணுவத்தினாலும் அரச இயந்திரங்களாலும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் 2009ஆம் ஆண்டு வரை இந்த பகுதி முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் காணப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதியில் பாரிய இராணுவ முகாம் ஒன்று காணப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில், இந்த இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது என்பது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம். அல்லது போரில் உயிரோடு பிடிக்கப்பட்ட போராளிகள் கொண்டுவந்து புதைக்கப்பட்டுள்ளதாக இருக்கலாம். இது தொடர்பான முழுமையான அகழ்வு பணி நடைபெறவேண்டும்.
இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற அகழ்வு பணிகள் மூலமாக மூடி மறைக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கின்றது.ஆகவே, இந்த விடையத்தில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டவேண்டும்.
சர்வதேச கண்காணிப்புடன் இவ்வாறான அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாகத்தான் உண்மைகளை வெளிக்கொண்டுவருவதற்கு வழியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.