முக்கிய செய்தி
அவசர விபத்துகளால் வருடாந்தம் 12000 பேர் உயிரிழப்பு – சுகாதார பிரிவு
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் புசல்லாவை சங்குவாரி பகுதியில் நேற்றிரவு(20) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கம்பளையிலிருந்து புசல்லாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கெப் ஒன்றே வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் புசல்லாவை பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார்.
விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் கெப் வண்டியில் குழந்தையொன்று இருந்ததாகவும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கெப் வண்டி சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணமாகவிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் பதிவாகும் பல்வேறு விபத்துகளினால் வருடாந்தம் 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல்வேறு விபத்துகளால் வருடாந்தம் 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அவசர விபத்துகளினால் வருடாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 12000 இற்கும் அதிகமானதாக காணப்படுவதாக அவர் கூறினார்.
இந்த விபத்துகளைத் தவிர்ப்பதற்காக 9 மாகாணங்களையும் உள்ளடக்கி, சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.