முக்கிய செய்தி
கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான விசேட கலந்துரையாடலை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் அந்நாடுகள் பங்குபற்றிய வேளையில் இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கும் அதன் அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
இலங்கையின் நீண்டகால நண்பன் என்ற வகையில், இந்தியா முதலில் கடன் மறுசீரமைப்பில் ஆர்வம் காட்டியதாகவும், எதிர்பாராத பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கைக்கு ஆதரவளித்ததாகவும் இந்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, இலங்கையின் நெருக்கடியிலிருந்து விரைவில் மீள்வதற்கு விரைவான தீர்வு தேவை எனத் தெரிவித்தார்.
அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் கலந்துரையாடல்களில் பங்கேற்று, முதல் மதிப்பாய்வுக்கு முன்னதாக செயல்முறையை முடிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதில் இருதரப்புக் கடன் வழங்கும் நாடுகளின் விரைவான முன்னேற்றத்தை இது குறிக்கும் என்று ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக செய்தியாளர் சந்திப்பில் உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.