பொழுதுபோக்கு
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஒஸ்கார் விருது அறிவிப்பு!
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஒஸ்கார் விருது அறிவிப்பு!
சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் வென்றுள்ளது.
நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றதால், அப்பாடல் ஒஸ்கர் விருதையும் வெல்லும் என பலரும் கணிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விருது பெற்று சாதனை படைத்துள்ளது.
இசையமைப்பாளர் கீரவாணி இசையில், சந்திரபோஸ் எழுதிய பாடல் இது. ’நாட்டு நாட்டு’ பாடலுக்கான நடனத்தை வடிவமைத்தவர் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் நடனத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இது வெறும் இசை, நடனம் மட்டுமல்ல. ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஒட்டுமொத்த கதைச் சுருக்கமே இந்த 10 நிமிட நாட்டு நாட்டு பாடல் என்று கூறலாம்.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் 1,200 கோடியை வசூலித்திருந்தது.
இப்படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார்.
இதேவேளை, நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” என்ற குறு ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது.
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.