Connect with us

உள்நாட்டு செய்தி

யாழ்.போராட்டத்தின் தற்போதைய நிலவரம்

Published

on

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக நேற்று (08) இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர்.

அதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டதை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தடையையும் உடைத்து உள்ளே சென்ற மாணவர்களும் சட்டத்தரணி க.சுகாஷும் உறுதி செய்தனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. பின்னர் வருகை தந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.

அதனால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை நேற்றிரவு 9 மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.