உள்நாட்டு செய்தி
நினைவு துபி உடைப்பால் யாழில் தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் நேற்றிரவு முதல் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை வழிமறித்து இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.
இதனையடுத்து கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை என தெரிவிழக்கப்படுகின்றது.
இதனால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்றிரவு 9 மணிமுதல் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
இதேவேளை குறித்த நினைவுதூபி சட்டபூர்வமற்றது என்பதால் அதனை அகற்றுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடம் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.