உள்நாட்டு செய்தி
இன்று பகல் கொள்ளை : எதிர்க் க ட்சித் தலைவர்
220 இலட்சம் மக்களில் பெரும்பாலானோர் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்போம் என தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்தவர்கள் இன்று நாட்டை மேலும் அதல பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று வெளிப்படையாகவே பட்டப்பகலில் நாட்டை அழிக்கும் பாரிய கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்று வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் அபிப்பிராயம் மற்றும் மக்கள் ஆணையின் மூலம் மட்டுமே அதை நிறுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
கல்வித்துறையில் பல தசாப்தங்களாக அரசியல் பழிவாங்கலுக்கு முகம் கொடுத்து தீர்வு கிடைக்காத ஆசிரியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று நேற்று (21) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
கல்வியை நவீன முறையிலும் முறையான வழிமுறைகளின் ஊடாகவும் சீர்திருத்த வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் செல்வாக்கின்றி சுதந்திரமாக தமது தொழிலை மேற்கொள்ளும் உரிமை ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்ற பொய்யான தேர்தல் வாக்குறுதிகளுக்குப் பதிலாக திட்டவட்டமான ஒரு வேலைத்திட்டம் மற்றும் நிலையான கொள்கையாக கருதி உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும், உரிய நியாயத்தை நிலைநாட்டுவதே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஒரே நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.