உள்நாட்டு செய்தி
யாழ் மாநகர முதல்வர் கைது
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ். மாநகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட மணிவண்ணன் 6 மணி நேர தீவிர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாநகர முதல்வர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்.மாநகர சபை ஊழியர்கள் ஐவரைக் கொண்ட காவல் படை பொது இடங்களில் குப்பை கொண்டுவோர், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்வோரிடம் தண்ட பணம் அறவிடும் செயற்பாட்டில் ஈடுபடும் என்று முதல்வரால் அறிவிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் காணப்பட்டன.
இந்தக் குழுவினர் பயன்படுத்திய சீருடை விடுதலைப் புலிகளின் காவல் துறையினரின் பயன்பாட்டில் இருந்த சீருடையை ஒத்தது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதையடுத்து மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். சீருடைகளைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாக்குமூலமும் , சீருடையும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.
விசாரணையின் பின்னர் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தனது முகநூலில் தெரிவித்திருந்தார்.