Connect with us

உள்நாட்டு செய்தி

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி நடைமுறையில் உள்ளதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதில் உள்ளவாறு சம்பளம் கிடைக்கும்

Published

on

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி நடைமுறையில் உள்ளதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதில் உள்ளவாறு சம்பளம் கிடைக்கும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானத்தினால் பெருந்தோட்டத் தொழில்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை சுட்டிக்காட்டியே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை குறிப்பிட்டார்.

வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குறைந்தபட்ச சம்பளத்தை பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான ஒரு மாத முன்னறிவித்தலை ஏற்கனவே கையளித்துள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொழிற்சங்கங்களுக்கான சந்தாவை அறவிடுவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ரொஷான் ராஜதுரை மேலும் சுட்டிக்காட்டினார்