உள்நாட்டு செய்தி
சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை – அதன் விலையை அதிகரிப்பதற்கும் தேவையில்லை : பிரதமர்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. எனவே பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான அவசியம் இல்லை என நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தைவாய்ப்பு தொடர்பில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கையை முன்வைத்து, கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை என தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ,போதுமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.