உள்நாட்டு செய்தி
பிரவுண்ஸ்விக் தோட்ட லயன் குடியிருப்பில் தீ

மஸ்கெலியா பிரவுண்ஸ்விக் குயின்ஸ்லேண்ட் தோட்டத்தில் லயன் குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீயில் சுமார் 20 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன.
இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர் ஏனைய வீடுகளுக்கும் பரவியதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலால் 20 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் நிர்கதியாகியுள்ளதாகவும் தீயினால் எவருக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மக்களின் ஆவணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தோட்ட நிர்வாகத்தினரும், பொலிஸாரும், இராணுவத்தினரும், தோட்ட மக்களுடன் இணைந்து பகிரதபிரயத்தனத்திற்கு பின்னர் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகளை தோட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.