Connect with us

முக்கிய செய்தி

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு மீளாய்வு செய்யப்படவுள்ளது

Published

on

அரசாங்க நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் சுயாதீன ஊதியக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

அரசாங்க நிதிக் குழுவிற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் இடம்பெற்ற அனைத்து கடிதத் தொடர்புகளின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு இல்லாத வகையில் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2024-2026 சம்பளத் திருத்தம் என்ற தலைப்பில் 16-03-2024 திகதியிட்ட இலங்கை மத்திய வங்கியின் கடிதம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சம்பள உயர்வு தொடர்பில் பரிசீலிப்பதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்தக் குழுவை நியமித்துள்ளார்.

தினேஷ் ஸ்டீபன் வீரக்கொடி, அர்ஜுன ஹேரத், கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சுதர்மா கருணாரத்ன, அந்தோனி நிஹால் பொன்சேகா, அனுஷ்க எஸ். விஜேசிங்க மற்றும் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்புடைய ஊழியர்களின் நிபுணத்துவத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இந்தக் குழு அனைத்து ஊழியர் தரங்களுக்கும் நியாயமான மாற்றங்களைச் செய்யும் என்று அரசாங்கத்தின் நிதிக் குழு எதிர்பார்க்கிறது.

தொழில்முறை ஊழியர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்கும் முறையானது தொழில்முறை அல்லாத ஏனைய ஊழியர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது.

எதிர்காலத் திருத்தங்களில் இலங்கை மத்திய வங்கியின் பணியாளர்கள் தொழில்துறை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இந்தக் குழு செய்யப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தின் நிதிக் குழு பரிந்துரைக்கிறது.

இது குறித்த அறிக்கையை 04 வாரங்களுக்குள் அரசாங்க நிதிக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், கிடைக்கப்பெறும் விடயங்களின் அடிப்படையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எட்டப்படும் வரை இலங்கை மத்திய வங்கி சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.