Connect with us

முக்கிய செய்தி

சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்த குழந்தை: வைத்தியர்கள் தலைமறைவு

Published

on

சிறுநீரக கோளாறு காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொரளை பொலிஸார் நேற்று முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஹம்தி பஸ்லின் என்ற குழந்தை சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ளதுடன், அவரின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குழந்தையின் சத்திரசிகிச்சையை மேற்கொண்டதாக கூறப்படும் விசேட வைத்தியர் நவீன் விஜேகோன் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, அவரது இருப்பிடம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன சம்பந்தப்பட்ட துறைகளால் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் உட்பட பல வைத்தியர்கள் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டதாக கூறப்படும் நுவான் ஹேரத் என்ற வைத்தியரும் தற்போது வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள இரண்டு வைத்தியர்களையும் இலங்கைக்கு வரவழைத்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் பொரளை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.