முக்கிய செய்தி
பருத்தித்துறை வைத்தியசாலையின் அவசர விபத்து – சிகிச்சை பிரிவை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்து ஜனாதிபதி
நெதர்லாந்து அரசாங்கத்தின் 04 பில்லியன் ரூபாய் கடன் உதவியில் பருத்தித்துறை வைத்தியசாலை அபிவிருத்தி இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும்
100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதார துறையை மேம்படுத்தி அதனை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE இலகுக் கடன் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்காக நேற்று (22) இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம் தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலையான (NSBM)மற்றும் பசுமை பல்கலைக்கழகத்திற்கான வைத்தியசாலை ஒன்றை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் லயிசியம் வைத்தியசாலையும் அதற்கான கோரிக்கையை விடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களையும் வைத்திய துறைக்குள் உள்வாங்கி நவீன வைத்திய முறைமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். யாழ். பருத்தித்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தமைக்காக நெதர்லாந்து அரசாங்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார். பருத்தித்துறை வைத்தியசாலையின் புதிய அவிருத்திக்காக நெதர்லாந்தின் DRIVE இலகுக் கடன் முறையின் கீழ் 04 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதோடு, அதனால் வைத்தியசாலையின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை மேற்பார்வை செய்த பின்னர் வைத்தியசாலை பணிக்குழுவினருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொப்ச் (Bonnie Horbach) மற்றும் VAMED முகாமைத்துவப் பணிப்பாளர் Paul de Bruin ஆகியோருக்கு ஜனாதிபதியால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இதன்போது நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் வட. மாகாண சுகாதார சேவை முன்னேற்றத்தின் மைல்கல்லாகும் என்றும், DRIVE திட்டத்தின் கீழ் அதற்கு அவசியமான கடன் உதவி வழங்கிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்திற்கும் நன்றி தெரிவித்தார். பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த புதிய வைத்திய வசதிகளை நாட்டின் சுகாதார சேவை முன்னேற்றதுக்காக செயற்திறனுடன் பயன்டபுத்த வேண்டுமென வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இந்த வைத்தியசாலையை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் போது முடிந்த வகையில் ஒன்றுபட்டுச் செயற்படுமாறும் ஆளுநர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இங்கு உரையாற்றிய நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொப்ச் (Bonnie Horbach) இலங்கை மக்கள் சகலருக்கும் சம அந்தஸ்த்து கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அதனால் நல்லிணக்கமும் மேம்படும் என்பதால் அதற்கான முயற்சிகளை சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை விடயங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இன்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன்னதாக வட. மாகாணத்தின் 4 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக VAMED நிறுவனம் சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைசாத்திட்டிருந்ததாகவும், இந்த நான்கு வைத்தியசாலைகளையும் கட்டமைப்பதற்கான செலவு 16 மில்லியன் யூரோவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது எனவும் அந்த தொகையில் 25% ஆன 4 மில்லியன் யூரோ செலவில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் கொவிட் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு நாடு முகம்கொடுத்திருந்ததை கருத்தில் கொண்டு முழுமையான அபிவிருத்தி கொடுப்பனவை 35% ஆக அதிகரிக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்திருந்தாகவும் அதனால் வட. மாகாணத்தின் சுகாதார செயற்பாடுகளை பலப்படுத்துவதில் நெதர்லாந்து அரசாங்கம் கொண்டிருக்கும் அரப்பணிப்பு வௌிப்படுவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான அங்கஜன் ராமநாதன்,காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வைத்தியசாலையின் பணிக்குழாத்தினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதேநேரம் விவசாய உற்பத்திகளின் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையிலான இணைய பக்கம் ஒன்றை ஆரம்பிக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் உரிய அமைச்சுக்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய “FARM TO GATE” இணைய பக்கமும் ஜனாதிபதி தலைமையில் பலாலி விமானப் படை முமாமில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நாட்டு விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்ட உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை பெரும் சந்தைகளுக்கு கொண்டுச் செல்வதற்கும் இடைத் தரகர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாக நுகர்வோரிடம் கொண்டுச் சேர்ப்பதையும் , உற்பத்திக்கு தகுந்த விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் “FARM TO GATE” இணையம் களம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.