முக்கிய செய்தி
விபத்தில் தந்தை, மகன் பலி : தாய் படுகாயம் !
கொழும்பு ஹைலெவல் வீதியில் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் சீமெந்து ஏற்றப்பட்ட லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி நேற்று (08) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
சீமெந்து ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறியின் டயர் திடீரென வெடித்து வீதியை விட்டு எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கொஸ்கம அலுபோடல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.