முக்கிய செய்தி
இலங்கையின் குற்றச்செயல்கள் தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்; ஆணையாளர் வோல்கர் டர்க், ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான வாய்மொழிப் புதுப்பிப்பின்போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் ஆழமான ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதாரத்திற்கான பொறுப்புக்கூறலைக் கோரி வீதியில் இறங்கி போராடினார்கள்.
தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் என்பன மிகக் கடுமையான சமூக-பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நாடு, அதன் அனைத்து சமூகங்களுக்கும் பயனளிக்கும் ஒரு நீண்டகால மாற்றத்தை மேற்கொள்ளும் என்பதில் பெரும் நம்பிக்கை இருந்தது, எனினும் அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும், அடிப்படை உரிமைகள் தொடர்பில் பாதக நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சுதந்திரங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக ஆளுகை ஆகியவற்றில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய அல்லது முன்மொழியப்பட்ட சட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதாக வோல்கர் டர்க் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதில் இணையப் பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு யோசனை, மின்னணு ஊடக ஒலிபரப்பு ஆணைய யோசனை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன மேற்பார்வை மற்றும் பதிவு யோசனை என்பவற்றின் ஊடாக இலங்கை அரசாங்கம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.
அத்துடன் ஒன்றுகூடல், சங்கம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்துகிறது, இது குடிமை இடத்தை மட்டுமல்ல, வணிகச் சூழலையும் பாதிக்கிறது என்று ஆணையாளர்குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பேரழிவுகரமான விளைவுகள் ஆழமாக, குறிப்பாக மிகவும் பின்தங்கியவர்களை தாக்குகின்றன என்றும் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு வறுமை 27.9 வீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் 2022 முதல் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களில் மூன்றில் இரண்டு பங்கின் மாத வருமானம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் உணவு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்வி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், சமூகப் பாதுகாப்பு மிகைப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. அத்துடன் இந்த ஆண்டு அரசாங்கத்தின் மிகப்பெரிய பாதீடு, நாட்டின் கடனைச் சரிசெய்வதை மட்டுமே குறியாகக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குனர்கள், நிதி மற்றும் ஆதரவை இலங்கைக்கு வழங்குமாறு ஆணையாளர் கோரியுள்ளார்.
இந்த ஆண்டுடன், இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆயினும்கூட, மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படாமல் உள்ளன என்று வோல்கர் டர்க் கூறியுள்ளார். காணாமல் போனவர்களின் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன.
இந்த தேடலின்போது அவர்கள் அச்சுறுத்தல்கள், கைதுகள் மற்றும் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் காணிப்பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன.
அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழியை வழங்கிய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்பன செயலிழந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகின்றன என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையையும் நீதியையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவிற்கான சட்ட வரைவை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், நம்பகமான உண்மையைக் கண்டறியும் செயல்முறைக்கான சூழல் நாட்டில் இல்லை.
சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் ஈடுபடுகின்றவர்கள், பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் கைதுகளுக்கு உள்ளாகின்றனர் என்ற முறைப்பாடுகளை தமது அலுவலகம் தொடர்ந்து பெறுகிறது என்றும் வோல்கர் டர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும் மீண்டும் நிகழும், இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடத்தல்கள், சட்டவிரோத காவலில் வைத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் தமது அலுவலகம் ஆழ்ந்த கவலையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு தனிநபர் ஒருவரை சித்திரவதை செய்தமைக்கு பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் கண்டறிந்த போதிலும், புதிய காவல்துறை அதிபரின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள், விரிவான பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன, உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு தனது அலுவலகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அத்துடன் குற்றவியல் நீதி விசாரணைகளை மேற்கொள்ளும் பல அதிகார வரம்புகளுக்கு ஆதரவை வழங்கி வருகிறது. அதேநேரம் குறிப்பிட்ட மனித உரிமைகள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை ஆழப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஆய்வுகளையும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆலோசனைகளையும் தமது அலுவலகம் மேற்கொண்டு வருவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.