முக்கிய செய்தி
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொலிஸாருக்கு ஊதிய உயர்வு
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அதேவேளை, வருமான வரி மற்றும் இதர வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (13) செவ்வாய்க்கிழமை முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவையும், அடுத்த கட்டத்தில் நிலுவைத் தொகையுடன் கூடிய அதிகரித்த கொடுப்பனவையும் பொலிஸார் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலர் வியானி குணதிலக கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின்படி சார்ஜன்ட் நிலையில் இருக்கும் ஒருவருக்கு 2,340 ரூபாய் முதல் 4,230 ரூபாய் வரையிலும், உதவி பொலிஸ் பரிசோதகர் நிலையிலிருந்து தலைமை பொலிஸ் பரிசோதகர் தரத்திலான அதிகாரிகளுக்கு 3,060 ரூபாய் முதல் 4,320 ரூபாய் வரையிலும், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் முதல் பொலிஸ் மா அதிபர் போன்ற உயரதிகாரிகளுக்கு மாதம் 4,140 ரூபாய் வரையில் கொடுப்பனவுகள் கிடைக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொலிஸாருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவு 18,930 ரூபாய் முதல் 25,140 ரூபாய் வரை காணப்படும் என்பதோடு, ஆறு மாதங்களில் நிலுவைத் தொகையுடன் வழங்கப்படுமென, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தெரிவித்துளது.
கொடுப்பனவு அதிகரிப்பு கடந்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த போதிலும் திறைசேரி நிதியை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. திறைசேரி நிதியை விடுவிக்கும் வரை தனது சொந்த நிதியில் இருந்து பணம் செலுத்துவதாக பொலஸ் திணைக்களம் ஒப்புக்கொண்டதாக குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
நாட்டில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் உள்ள நிலையில், பொலிஸாருக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது பல கேள்விகளை எழுப்பக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
போராட்டங்களை கட்டுப்படுத்துவது, போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி சோதனை மற்றும் புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்களுக்கு மேலதிகமாக, அவர்களின் அடிப்படை ஊதியத்தில் நான்கில் ஒரு மடங்கு அதிகரிக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இது கடந்த 2023ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையின் அடிப்படையில், அமைச்சரவையில் ஒப்புதலை அடுத்து நடைமுறைக்கு வருமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு உள்ளவர்கள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு அடிப்படை ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் தகுதி வாய்ந்த 8,381 அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. அதில் 4,587 பேர் கொன்ஸ்டபிள் தரத்திலிருந்து சார்ஜன்ட் தரத்திற்கு உயர்த்தப்பட்டனர்.
2,297 பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ள நிலையில், 910 அதிகாரிகள் நேர்காணலுக்குப் பின்னர் சேவையில் மீண்டும் இணைத்துக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் 62 அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு பொதுச் சேவை ஆணைக்குழுவிடமிருந்து பொலிஸாரினால் பரிந்துரை கோரப்பட்ட போதிலும், கடந்த வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரை இலங்கை பொலிஸுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.