முக்கிய செய்தி
உண்மை மற்றும் நல்லிணக்க சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்!
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையில், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் (ISTRM) ஏற்பாடு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக நீண்டகாலமாக கோரி வரும் சர்வதேச பங்களிப்புடன் ஒரு நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு பதிலாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு” என அரசாங்கத்தால் குறிப்பிடப்படும், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (CTUR) வரைவின் பல்வேறு அம்சங்களைப் பற்றி கலந்துரையாடுவதும் நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராய்வதும் இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக இருந்ததாக, இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் சட்ட விவகாரங்கள், கொள்கை மேம்பாடு, மக்கள் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (ISTRM) ஆகிய 04 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதை உறுதிசெய்து பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உட்பட, நிலைமாறுகால நீதியின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய வலுவான கருத்துப்பரிமாறலுக்கு இந்த கலந்துரையாடல் வாய்ப்பளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிலைமாறுகால நீதிச் செயன்முறைக்கான நம்பிக்கையையும் சட்டப்பூர்வமான தன்மையையும் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களை சேகரிக்க பரந்த மற்றும் வெளிப்படையான ஆலோசனை செயல்முறையை நடத்துவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டதாக அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் சட்டம் தொடர்பான பேராசிரியை சாவித்ரி குணசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரதானி கலாநிதி சி.வை.தங்கராஜாவின் உதவியுடன் அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவம்சவினால் நெறிப்படுத்தப்பட்டது.