முக்கிய செய்தி
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் திருத்தங்கள் உரிய வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என ஆராயப்படும் !
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய உள்ளடக்கப்பட்ட திருத்தங்கள் உரிய வகையில் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக ஆராயவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து சட்டமூலங்களிலும் திருத்தங்களை உள்ளடக்கிய பின்னர் அவை உரிய வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து ஏதேனும் குறைபாடுகள் காணப்படின், அவற்றை நிவர்த்தி செய்ய சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்திய பின்னர் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினால் அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறைகளின் பின்னர் தம்மிடம் சமர்பிக்கப்படும் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுப்படுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.