முக்கிய செய்தி
இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு !
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால், சிரமங்களை எதிர்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு ஜோர்தான் தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜோர்தானுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள், அந்நாட்டு தொழில் அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் அண்மையில் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
விசா காலாவதியாகியும் தமது நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்களை அபராதம் எதுவுமின்றி திருப்பியனுப்ப ஜோர்தான் தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்களுக்கான விமான பயணச்சீட்டுக்களை வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தொழில் மற்றும் துறைசார் பயிற்சி உரிமைகள் தொடர்பான விசேட தௌிவு கொண்டுள்ள சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் ஜோர்தான் தொழில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் குறித்த ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த தொழிலாளர்களில் வேறு தொழில்களுக்குச் செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவும், நாடு திரும்பும் எதிர்பார்ப்பிலுள்ள தொழிலாளர்களை கூடிய விரைவில் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பணியகம் மேலும் கூறியுள்ளது.