முக்கிய செய்தி
இந்தியாவிடம் இருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்ய கோரிக்கை
ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியாவிடம் இருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நாட்டிற்குத் தேவையான பெரிய வெங்காயத்தை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரிடம் இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
75,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, இலங்கையில் வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. தற்போது உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
விலை அதிகரிப்பை தொடர்ந்து பாகிஸ்தானிடம் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்தியாவின் ஏற்றுமதித் தடையைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெங்காயத்தில் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு, இறக்குமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.