முக்கிய செய்தி
வரியை மேலும் அதிகரிக்க முடியாது: அரசாங்கம் IMF இற்கு தெரிவிப்பு
கோரியபடி இந்த நேரத்தில் வரி சதவீதத்தை மேலும் அதிகரிக்க முடியாது என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அறிவித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அடுத்த வருடத்தின் முதல் காலாண்டின் இறுதிக்குள் வரி வருவாயை ஓரளவு அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமாயின் வரி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், இத்தருணத்தில் மக்கள் மீது அதிக வரிகளை சுமத்த முடியாது என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை தாமதமாகி வருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தாதது பிரச்சினையல்ல. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டின் இறுதிக்குள் இலங்கை குறிப்பிட்ட இலக்கிற்கு வரி வருவாயைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது. அந்த வரி வருவாயை பூர்த்தி செய்ய தற்போதுள்ள வரி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். இலக்குகளை நாங்கள் IMF-க்கு தெரிவித்தோம், அரசாங்கம் மேலும் வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தக்கூடிய நிலையில் இல்லை. வரி வருவாயை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை IMF வலியுறுத்துகிறது,” எனவும் தெரிவித்துள்ளார்.வரி வருவாயை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட கலந்துரையாடல்களை கோருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.