Connect with us

முக்கிய செய்தி

சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட இரும்பு ஆணிகள்

Published

on

சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் போது உணவுக்கு பதிலாக ஆணிகள் மற்றும் இரும்பு ஸ்பிறிங் ஆகியவற்றை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்டதாக மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சவூதி வைத்தியசாலையொன்றில் உள்ள வைத்தியர் ஒருவரின் தலையீட்டில் தூதரகத்தின் ஊடாக குறித்த பணிப்பெண் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் Taid பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த மாத்தளை, அல்கடுவ பிரதேசத்தினை சேர்ந்த எம்.எஸ். தியாக செல்வி என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இருபத்தொரு வயதான ஒரு பிள்ளையின் தாயான எம்.எஸ். தியாக செல்விக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவரது தாய் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.ஜுன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக வீட்டு வேலைக்காகச் சென்றதாகவும், குறித்த வீட்டில் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், கான்கிரீட்டில் அடிக்கப்பட்ட ஐந்து வெள்ளை ஆணிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும், வயரை விழுங்க மறுத்தமையினால் அடித்து நீரில் மூழ்கடிக்க செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து பல நாட்களுக்குப் பிறகு, வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத்தொடங்கியபோது, ​​குடியிருப்பாளர்கள் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது  வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகள் இருப்பதைக் கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனையில் வெளியான தகவல்இதனை தொடர்ந்து இலங்கைக்கு வந்து கண்டி வைத்தியசாலையில் பரிசோதனை செய்த போது தனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது கண்டறியப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர்களால் ஒரு ஆணி எடுக்கப்பட்டதாகவும், மற்றொரு இரும்பு ஆணி தனது வயிற்றின் பின்புறத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அறிவித்த போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை என பெண்ணின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழும் மகள், குழந்தையின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்றதாகவும், இது போன்ற சம்பவங்கள் யாருக்கும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வத்தேகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டுப் பணிப்பெண்ணிடம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வத்தேகம பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *