முக்கிய செய்தி
வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களின் வீதத்தில் உச்ச அதிகரிப்பு…!
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நாட்டில் இருந்து வெளியேறுபவர்களில் ஆண்களின் வீதம் தொடர்ந்து ஏறு வரியையை காட்டி நின்ற நிலையில்,பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் வெளியேறும் பெண்களின் வீதத்தில் அதிகரித்த போக்கை வெளிப்படுத்துவதாக ஆய்வுகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
2000 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின் நிமித்தம் சவூதி, கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு சென்றவர்களில் 67 வீதமானோர் பெண்களாகவும் 33 வீதமானோர் ஆண்களாகவும் காணப்பட்டுள்ளனர்.2008 ஆம் ஆண்டு வரையில் வெளியேறுபவர்களில் அதிகளவானோர் பெண்களாக காணப்படுவதை தரவுகள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.
2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் அதிகளவானோர் ஆண்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து வேலைவாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறியோரில் ஆண்களின் வீதம் ஒருசில வருடங்களில் கூடி குறைந்தாலும்,ஒட்டுமொத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்களை விட அதிக வீதத்தையே வெளிப்படுத்துகின்றது.
எவ்வாறாயினும் 2021 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறும் பெண்களின் வீதம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.இதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் வேலை நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 40 வீதமானோர் பெண்கள் (கடந்த வருடத்தை விட 7 வீத அதிகரிப்பு) என பதிவாகியுள்ளது.இவர்களில் 60 வீதமானோர் வீட்டு பராமரிப்பு உதவியாளர்களாவும் 30 வீதமானோர் குறைந்தளவு மூளையை பயன்படுத்த கூடிய தொழில்களுக்காகவும்,1.08 வீதமானோர் நடுத்தர தொழில்களுக்காகவும் வெளியேறி உள்ளனர் எனவும் 1.18 வீதமானோர் சிறந்த தொழில் தகைமை கொண்டவர்கள் எனவும்,5.5 வீதமானோர் நிபுணத்துவம் பெற்றவர்கள் எனவும் 2 வீதமானோர் அலுவலக பணிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் நாட்டை விட்டு வெளியேறிய ஆண்களின் வீதம் 2021 ஆம் ஆண்டில் 67 வீதமாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 60 வீதம் ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.