உள்நாட்டு செய்தி
சிறுபான்மையின மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் பொலிகண்டியில் நிறைவு
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி பல தடைகளையும் உடைத்து தனது இலக்கான பொலிகண்டியை இன்று (08) மாலை வந்தடைந்தது.
வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறியகால ஏற்பாட்டில் இந்த பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது.
அதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கின.
திட்டமிட்டபடி கடந்த 3ஆம் திகதி அம்பாறை பொத்துவிலில் கொட்டும் மழையில் பேரணி ஆரம்பமாகி, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
பேரணிக்கு அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்கி எந்தவொரு குழப்பநிலைகளும் ஏற்படாது முன்னெறியது.
இந்து, கிருஸ்தவ மதகுருமார்கள் முன்னின்று பேரணியை நடத்தினர்.
பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது வாழ்வுரிமையையும் போரின் பின்னரும் தொடரும் அடக்குமுறைக்கு எதிராக கிளந்தெழுந்தனர்.
சாவகச்சேரி நகரில் தீப் பந்தங்களை ஏந்தி மத தலைவர்கள் உள்ளிட்டவர்கள் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலைக்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். செம்மணியை பேரணி சென்றடைந்தபோது செம்மணி புதைகுழிக்கு அருகில் மற்றுமொரு அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
செம்மணியிலிருந்து கண்டி வீதியூடாக யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன் உள்ள தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற இடத்தை பேரணி சென்றடைந்த போது அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரை பேரணி சென்றடைந்ததுடன், காங்கேசன்துறை வீதி ஊடாக யாழ். பல்கலைக்கழத்தை பேரணி சென்றடைந்து.
முள்ளிவாய்க்காலில் இருந்து எடுத்துவரப்பட்ட மண் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
பலாலி வீதி ஊடக யாழ். நல்லூருக்கு பேரணியாக சென்ற மக்கள் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகே கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பெருந்திரளான மக்கள் புடைசூழ யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலிருந்து யாழ். பருத்துறை வீதி ஊடக பொலிகண்டியை நோக்கி கவனயீர்ப்பு பேரணியின் இறுதிக் கட்டம் முன்னெடுக்கப்பட்டது.