முக்கிய செய்தி
மின் கட்டணத்தை 32% ஆல் அதிகரிக்க யோசனை..!
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஐம்பத்து நான்கு பில்லியன் ரூபாவை ஈட்டுவதற்காக,மின்சாரக் கட்டணத்தை 32% ஆல் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று (4) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும் வரட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதால் 3500 மெகாவாட் மின்சார உற்பத்தி கடும் நெருக்கடியை சந்திக்கலாம் என இலங்கை மின்சார சபை கருதுகிறது.இதன்படி, மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் 42 ரூபா தொகை 56 ரூபாவாக அதிகரிக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்திருப்பதால், அனல் மின் நிலையங்களிலிருந்தும் மின்சாரத்தைப் பெற வேண்டியிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவிக்கிறது.ஆகஸ்ட் 2022 முதல் மூன்று மின் கட்டண திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. உத்தேச கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டால், ஒரு வருடத்திற்குள் கட்டணங்கள் 200%க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.கொழும்பில் நேற்று (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த பிரேரணைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோருவதாக அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.